மதுரை மாவட்ட செய்திகள்: பெண் மீது உருட்டு கட்டை தாக்குதல், வழிப்பறி, மாணவி தற்கொலை
கூடல் புதூரில் மகனுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட தாயை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோசாகுளம் கருப்பசாமி நகர் வெயில் முத்து மனைவி மீனாட்சி 49. இவரது மகனுடன் அதே பகுதி முனியாண்டி கோவில் தெரு குருநாதன் மகன் வேல்முருகன் 20 என்ற வாலிபர் வாய் தகராறு ஈடுபட்டுள்ளார். மகனுடன் தகராறு செய்வதை கண்ட மீனாட்சி அந்த வாலிபரை இது குறித்து தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், மீனாட்சியை ஆபாசமாக பேசி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து மீனாட்சி கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் வேல்முருகனை கைது செய்தனர்.
மேலூர் தாலுகா ஆட்டு குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆதித்யன் 22. இவர் மேலூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த செல்போனையும் அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தையும் வழிப்பறி செய்தனர்.
இந்த வழிப்பறி குறித்து ஆதித்யன் மாட்டு தாவணி போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் மற்றும் செல்போன்பறித்த இரண்டு ஆசாமிகளையும் தேடி வருகின்றனர்.
செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
ஆனையூரில் செந்தூர் நகரை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் மகள் லத்திகா 19. இவர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவருடைய தந்தை கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த மாணவி விஷமாத்திரைகளை தின்று மயங்கிக்கிடந்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவி லத்திகாவின் தந்தை பிரிதிவி ராஜன் கூடல் புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து லத்திகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் நூதன மோசடி
மதுரை அரசு மருத்துவமனையில் ஊழியர் போல் நடித்து பெண்ணிடம் 7 கிராம் தங்கத் தாலியை மோசடி செய்து ஓடிய பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஐராவதநல்லூர் ராஜா நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி செல்வகுமாரி 53. இவருடைய மகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் மருத்துவமனை ஊழியர்போல உடை அணிந்து வந்தார்.அவர் ஸ்கேன் எடுக்க செல்ல வேண்டும் அந்தப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனால் அவர் அணிந்திருக்கும் தாலியை கழட்டி கொடுக்குமாறு கேட்டுப் பெற்றுள்ளார். இதை நம்பிய நோயாளி தான் அணிந்திருந்த தங்க தாலியை கழட்டி கொடுத்து விட்டார். அதை பெற்றுக்கொண்ட மோசடிப்பெண் பின்னர் நைசாக அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் பின்னர் தெரிய வந்துள்ளது .இது குறித்து மருத்துவமனை சேர்க்கப்பட்ட நோயாளியின் தாய் செல்வகுமாரி மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் செய்தார். நோயாளிடம் தாலி திருடிய மோசடி பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்
இந்திய பல் மருத்துவ சங்கம் மதுரை கிளை சார்பாக பதூரில் ஜெய்னி சிறப்புப்பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு பல் மருத்துவ முகாம், அறுவை சிகிச்சை உட்பட சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டது .
இதில் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஓய்வு டாக்டர் பாண்டியன் தலைமையிலும் பொது மருத்துவம் டாக்டர் கண்மணி, பள்ளி நிர்வாகி ஆயமாலா தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த சிறப்பு பல் மருத்துவ முகாமில் நானூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பல் சம்பந்தமான சிறப்பு சிகிச்சைகள் செய்யப்பட்டன.
இலவசமாக மருந்து, மாத்திரைகள், பார்ப்பசை, டூத் பிரஸ் முதலியவைகள் வழங்கப்பட்டன. இம்மு முகாமில் பல் மருத்துவர்கள் பிரபு, பிரபாகரன், பிரதீப், அமிர்தா, மேகலா, செந்தில்குமரன், வித்யா ராஜலக்ஷ்மி, அபிராமி மற்றும் சங்க உறுப்பினர்கள் டாக்டர் பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu