மதுரையில் அமைச்சரின் வான் திட்டம்.

மதுரையில் அமைச்சரின் வான் திட்டம்.
X

மதுரை மகபூப்பாளையத்தில் நவீன மின் தையல் இயந்திரங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த தையல் தொழில் கூடத்தை  பார்வையிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான "வான்" திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

உலக மக்கள் தொகையில் சரி பாதியாக பெண்கள் இடம்பிடித்துள்ள நிலையில் அவர்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார உருவாக்கம் குறித்து உலகம் முழுவதும் பரவலாகப் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆயினும்கூட, தொழில் மற்றும் வணிகத்தில் அவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது.

அதிலும் முக்கியமாக தொழில்முனைவோரை விட தொழிலாளர் சக்தியாக கீழ் அடுக்கிலேயே பெண்கள் பெருமளவில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் பண்பாடு, மரபு மற்றும் சமூக கலாசார சூழல் காரணமாக பெண்கள் வணிக சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் தாமதமாகவே நுழைந்துள்ளனர்.

இதற்கான தொலைநோக்குத் தீர்வாக, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்திட அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிட, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் தனது தொகுதியில் முன்னோடியாக ‘வான்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: இத்திட்டமானது சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிரை உள்ளடக்கிய வெகுஜன தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியாகும்.

பெண்கள் தாங்களே ஒரு தொழிலைத் தொடங்கவும், தொழிலை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், சமூகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உதவவிட முடியும் என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளது.

இதன்மூலம் மதுரை மத்திய தொகுதியில் நலிவடைந்த, வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொன்றும், அக்குடும்பத்தில் உள்ள பெண்களின் மூலம் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ.10000 வருமானம் ஈட்டிட இத்திட்டம் வழி செய்யும். மேலும், இத்திட்டம் அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதார வளார்ச்சிக்கான முன்னெடுப்பை அதிகரிப்ப தற்கும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இந்த திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள(BPL) சமூகத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தன்னிசையாக இயங்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற தொழிலில் அவர்களை ஈடுபட செய்திட ஒரு பாலமாக நாங்கள் செயல்படுகிறோம். இதன் மூலம் அப்பெண்கள், அவர்கள் பகுதியை சேர்ந்த, அதே சமூக-பொருளாதார அடுக்கை சேர்ந்த சக பெண்களுக்கு தங்கள் தொழிலில் வேலை வாய்ப்பினை வழங்கிடுவார்கள்.

முதற்கட்ட சிந்தனையிலிருந்து, இறுதி வடிவம் வரை, ஆர்ம்ப கட்ட செயல்படுத்துதல் தொடங்கி தொழில்முனைவோரை வணிக பயணத்தில் கைப்பிடித்து கொண்டுசெல்லும் வரை முழு திட்டத்தையும் மேற்பார்வையிட எங்களிடம் நிபுணத்துவம் பெற்ற குழு ஒன்றும் உள்ளது.

இதன் மூலம் மதுரை மத்திய தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழு ஆக்கபூர்வமாக செயல்படும் வடிவமாக மாற்றம் பெறுவதோடு, இத்தொகுதியில் வாழும் பெண்கள் சமுகம் ஒரு புத்தெழுர்ச்சி பெற்ற சமூகமாக மாற்றம் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

இதன்படி, முதற்கட்டமாக இத்திட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியில் தொடங்கப்பட்டு அங்கு ஒரு பெண் தொழில் முனைவோர் மூலம் கப் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரபல நிறுவனத்திற்கு கப் சாம்பிராணி தயாரித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய சொந்த தயாரிப்பு சந்தைக்கு விறபனைக்கு வர உள்ளது.

வான் திட்டத்தின் இரண்டாவது பகுதி..

வான் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக மகபூப்பாளையத்தில் மதுரை ராஜ்மஹால் நிறுவனத்தின் சி எஸ் ஆர் நிதி மூலம் 25 நவீன மின் தையல் இயந்திரங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த தையல் தொழில் கூடம் மூலம் அமைக்கப்பட்டு அதன் மூலம் தையல் தெரிந்த மகளிருக்கு சட்டை, பாவாடை, நைட்டி,துண்டுகள் ஆகியவற்றை தைத்து கொடுக்கிற அளவிற்கு மொத்தமாக பணி உத்தரவு பெற்று தரப்பட்டுள்ளது.

இதன்மூலம் எந்த முதலீடும் இங்கு இல்லாமல் இங்கு பணியாற்றி அதன் மூலம் பலன் பெற உள்ளனர். இதில் மூன்று வெவ்வேறு சுயஉதவிக்குழுவில் இருந்து மகளிர் 25 பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.இதனை மாதிரியாக எடுத்துக்கொண்டு இன்னும் பல தொழிற்கூடங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தார்.

Next Story