மதுரையில் பல்நோக்கு மருத்துவ முகாம்: மேயர் தொடக்கம்
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு , பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 அருள்மலர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மாநிலம் முழுவதும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு , மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 2 மருத்துவ முகாம்களும், ஊரக பகுதிகளில் 4 மருத்துவ முகாம்களும் என மொத்தம் 6 இடங்களில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், சமூக பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்கள் , தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது. மதுரை மாநகராட்சி கே.கே.நகர் அருள்மலர் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் தாய் சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இசிஜி, தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனை மருத்துவம், இருதய மருத்துவம் மகளிர் மருத்துவம் கண் காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம் , எலும்பியல் மருந்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயர் வேத சிகிச்சை ஆலோசனையும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மருத்துவர்கள் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் படுகிறது. இதுபோன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இம்முகாமில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, சுகாதார குழுத் தலைவர் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் மரு.கோதை, மாமன்ற உறுப்பினர்கள் மாலதி, அந்தோனியம்மாள், நாகநாதன், மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu