மதுரையில், கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

மதுரையில், கதர் சிறப்பு  விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
X

மதுரையில் கதர் விற்பனயை தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

மதுரையில் கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா அமைச்சர்கள் .மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை, மேலமாசி வீதி உள்ள கதர் விற்பனை நிலையத்தில் , (02.10.2023) தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பாக நடைபெற்ற அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை விழாவில், அமைச்சர்கள் மூர்த்தி, மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர் .

அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில், உசிலம்பட்டி வட்டம், அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம் 1-ம் உசிலம்பட்டி கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில், கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.

கிராமிய நூற்பு நிலையத்தில் 25 ராட்டைகள் மற்றும் கதர் உபகிளையில் 15 தறிகளும் செயல்பட்டு வருகிறது. இதனால், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும் அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்படும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் குறியீடு ரூ.75.00 லட்சத்தில் கதர் ரகங்கள் ரூ.49.99 லட்சமும் மற்றும் கிராமப் பொருட்கள் குறியீடு ரூ.65.00 லட்சத்தில் ரூ.24.28 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வதாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு , மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் ஆகிய இடங்களில் 02.10.2023 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படுத்தப்படுகிறது

மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள் ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள் , கதர் பாலிஸ்டர் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர், பாலிவஸ்தரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%-ம் உல்லன் ரகங்களுக்கு 20%-ம் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும். இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.180.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் இல. சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!