மதுரை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு
மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் மிக முக்கிய பணிகளான கோரிப்பாளையம் மேம்பாலம், அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை, அமைச்சர் எ.வ.வேலு,நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு , செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தென்தமிழகத்தின் மிக முக்கிய நகரமாக மதுரை விளங்குகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 212 பணிகள் ரூ.515 கோடி மதிப்பில் 281 கி.மீ. நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவற்றில், 200 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள நடைபெற்று வருகிறது. பணிகள் நடப்பு ஆண்டில் 30 பணிகள் ரூ.112 கோடி மதிப்பில் 60 கி.மீ. நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மேம்படுத்தும் பொருட்டு 27 பணிகள் ரூ.17 கோடி மதிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் கிராம சலைகள் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் 64 சாலைகள் ரூ.142 கோடி மதிப்பில் 111 கி.மீ. நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவற்றில் 52 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் 25 ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தும் பணிக்காக ரூ.56 கோடி மதிப்பில் 41 கி.மீ. நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் 1.20 கி.மீ. நீளத்திற்கு ரூ. 42 கோடி மதிப்பில் இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
30.10.2023 அன்று மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது. அப்பல்லோ சந்திப்பு சாலை மேம்பாலம் சிவகங்கை சாலையில் அப்பல்லோ சந்திப்பில் ரூ.150.23 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சாலை சென்னை, திருச்சி மற்றும் சிவகங்கையிலிருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பிரதான சாலையாகும். தற்போது அப்பல்லோ சந்திப்பில் நான்கு வழித்தட சாலை மேம்பாலம் அமைப்பதுடன் மூன்று சந்திப்புகளிலும் ரவுண்டானாவுடன் கூடிய சந்திப்பு மேம்பாடு செய்து நான்கு வழித்தடச் சாலையாக அகலப்படுத்தப்படும். தற்போது இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் 30 சதவிதம் நிறைவடைந்துள்ளன.
கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி ரூபாய் 190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோரிப்பாளையம் சந்திப்பானது, மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிக முக்கிய சந்திப்பாகும். இப்பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்க்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் அமைய உள்ளது.
மேலும் கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து செல்லூர் நோக்கி கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் அமைய உள்ளது. தற்போது இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் 15 சதவிதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு 2025 ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் தொடங்கப்பட்டு கடந்த ஓராண்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து பயன்பெற்றுள்ளதையொட்டி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இனிப்பு வழங்கி, நூலகத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வுகளின் போது , பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அதிகாரி (தொழில்நுட்பம்) ஆர்.சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் கே.ஜி.சத்தியபிரகாஷ் , நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம்.சரவணன், கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.கே.ரமேஷ் , கோட்டப் பொறியாளர் எம்.மோகனகாந்தி மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu