மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி
X

மதுரையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடனுதவிகளை வழங்கினார்.

மதுரையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக, மாநில அளவில் 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 மகளிருக்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும்,,12,233 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்,1013 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 108 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள்என 25,000 மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 298 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (09.09.2024) மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக தமிழ்நாடு மாநில அளவில் 31,220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 மகளிருக்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து, மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் 12,233 பயனாளிகளுக்கு ரூபாய் 75 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1013 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 108 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 25,000 மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.298 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் , இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-


மதுரையில் நடைபெறுகிற இந்த அரசு நிகழ்ச்சியில், 12 ஆயிரத்து 233 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 1013 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 17 ஆயிரம் சகோதரிகளுக்கு சுமார் 108 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆதி திராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளாண் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் ரூபாய் 298 கோடி மதிப்பில் உதவிகளையும் ரூபாய் நலத்திட்ட வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதுரைக்கு எப்போது வந்தாலும் ஒரு உற்சாகம் ஏற்படும். அதுக்கு காரணம், மதுரை மக்களின் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் தான். 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுரையிலிருந்து தான் தொடங்கினேன்.

⁠மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, விருதுநகர், தேனி மக்களவைத் தொகுதிகளுக்கு எல்லாம் வந்து உங்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். இந்த மூன்று தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைத் தருவோம் என்று தெரிவித்தீர்கள். சொன்னது போல மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். அதுக்கு இந்த என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்மோட திராவிட மாடல் அரசுக்கான நற்சான்றிதழாக, தமிழ்நாட்டு மக்கள் 40-க்கு 40 தொகுதிகளையும் வெற்றி பெற வச்சு, நம்ம அரசுக்கு முழு மதிப்பென் கொடுத்துள்ளார்கள். ⁠இந்த வெற்றி, உங்களுக்காக இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும், பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்கிற பொறுப்பை எங்களுக்கு அதிகப்படுத்தி உள்ளது.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மதுரையில் இவ்வளவு பெரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்துகிறோம். இங்கே நடப்பது அரசு விழாவா இல்லை மதுரை சித்திரை திருவிழாவா என்று கேட்கிற அளவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உள்ளார்கள். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருந்தாலும், அவருடைய எண்ணம் எல்லாம். தமிழ்நாட்டைப் பற்றியும், மதுரையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் தான் இருக்கும். உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தன்னுடைய ஆட்சி காலத்தில் மதுரையில் தான் தொடங்கி வைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர், நூற்றாண்டை முன்னிட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் அவர்கள் மதுரையில் திறந்து வைத்துள்ளார்கள். அதே போல ஜல்லிக்கட்டுக்கு பேர் போன அலங்காநல்லூரில் 63 கோடி ரூபாய் மதிப்பில் "கலைஞர் ஏறுதழுவுதல்" அரங்கமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மக்கள் மட்டுமல்ல தென் மாவட்ட மக்கள் எல்லாருமே மகிழ்கின்ற அளவுக்கு மதுரையை நோக்கி ஏராளமானத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் சேவைகளை மக்கள் தேடிப் போன காலம் மாறி, இன்று அரசே உங்களைத் தேடி வந்து திட்டங்களை எல்லாம் வழங்கி வருகிறது. அதுமட்டுமில்ல, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, தொழில் - உற்பத்தி - சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் நம்முடைய அரசால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. வங்கிக் கடன் இணைப்பை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும், முந்தைய வருடத்தோட அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மதுரையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், மொத்தம் 31 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் சகோதரிகளுக்கு, 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இணைப்பை வழங்குகிறோம். மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். சென்னையில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நம் முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக்குழு சார்பில் பல்வேறுக் கூட்டங்களை நடத்தி, முதலமைச்சரிடம், ஒரு அறிக்கையை சமர்ப்பித்தோம்.

அதனடிப்படையில், சென்னையில் மட்டும் 2 மாதங்களில் 40 ஆயிரம் பட்டாக்களை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டோட பண்பாட்டுத் தலைநகர் மதுரையில 12 ஆயிரம் பேருக்கு பட்டாவை வழங்கப்படுகிறது. மகளிரின் சுதந்திரத்தை பொருளாதார உறுதி செய்ய வேண்டும் என்று நம் முதலமைச்சர்,பல்வேறு திட்டங்களை தந்து வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளே மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டத்துக்குத் தான் நம்முடைய அவர்கள் கையெழுத்திட்டார்கள். அந்தத் திட்டம் மூலம் 520 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளார்கள். குறிப்பாக, இந்த மதுரையில மட்டும் 21 கோடி பயணங்கள் மேற்கொண்டு மகளிர் பயனடைந்துள்ளார்கள்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளியில படிக்கிற மாணவிகள், உயர்கல்வி சேரும் போது அவங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி சேரும் போதும் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை திட்டத்தை வழங்குகிற நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்துள்ளார்கள். மாநில அளவில் இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக, கிட்டத்தட்ட 7 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு, இந்த ஒரு வருடத்தில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய்னு, தலா 12 ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் 4 லட்சத்து 62 ஆயிரம் மகளிர் பயனடைந்து வருகிறார்கள்.இத்தகைய திட்டங்களால், தமிழ்நாட்டு மகளிர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். இந்திய அளவில் பணிக்கு செல்லும் மகளிர், 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தான் காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முக்கிய இடத்தில் இருக்கு. உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரியில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 50 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.


இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தைக் கொண்டது நம் தமிழ்நாட்டுக் கல்விமுறை தான். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற பகுத்தறிவோட கேள்வி கேட்க சொல்லித்தர்ற தமிழ்நாட்டு கல்விமுறை, இன்னைக்கு சில பேரோட கண்களை உறுத்துகிறது. அதைப்பற்றி நமக்கு கவலை இல்ல. நம் மாணவர்களின் முன்னேற்றம் தான் முக்கியம் என்று, நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப்பள்ளியில படிச்சு வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்கப் போற மாணவர்களோட முதல்பயணச் செலவு, முதல் ஆண்டுக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இந்த திட்டங்களின் காரணத்தால், தமிழ்நாடு அரசு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை இடத்தில் இருக்கிறது. இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பே புள்ளி விவரத்தோடு சொல்லியுள்ளது. மாணவர்கள், மகளிர், அனைத்து தரப்பு மக்களின் நன்மைக்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் தொடர்ந்து உழைக்க நம்முடைய அரசும் முதலமைச்சர் அவர்களும் -நாங்களும் தயாராக இருக்கிறோம்.

மகளிருக்கு, கொடுத்திருப்பது வெறும் கடன் தொகை மட்டுமல்ல. அதனை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்க உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத் தான் பார்க்கிறார்கள். வங்கிக்கடன் பெற்றுள்ள ஒவ்வொருத்தரும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். மகளிர் சில பேருக்கு தொழில் தொடங்க ஒரு தயக்கம் இருக்கும். இதுபற்றி கலைஞர் அவர்கள் கூறிய ஒரு விஷயத்தை உங்களிடம் விரும்புகிறேன். நீச்சல் கத்துகிட்ட பிறகு தான் ஆத்துல இறங்கி நீச்சல் அடிப்பேன்னு சொன்னா, ஒரு நாளும் நீச்சல் கத்துக்க முடியாது. எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் மகளிர் நீங்கள், தொழில் முனைவோர் ஆகிட துணிச்சலோடு செயல்பட்டிட வேண்டும். உங்களுக்கு எல்லா வகையிலும் நம் கழக அரசு துணை நிற்கும். துணிச்சலோடு முன்னேறிச் செல்லுங்கள்.

இவ்வாறு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங்,மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், (மதுரை), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி ஆணையாளர் ச. தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா,மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் கா.வானதி , மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநித, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!