மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரி நிறுத்தம்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் (கோப்பு படம்).
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
மதுரையின் புகழ்பெற்ற அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் அதற்கு அடுத்த படியாக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் ஆகும். நாயக்க மன்னர்கள் காலத்தில் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது வரலாறாகும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தையும் பார்க்காமல் செல்வது இல்லை. அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
இந்த தெப்பக் குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2020 நவம்பர் முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக படகு சேவை துவங்கப்பட்டது.
இந்த நிலையில், தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக படகு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த பிறகு நீர் நிரப்பப்பட்டு மீண்டும் சேவை தொடங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. படகு சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் மாரியம்மன் தெப்பகுளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu