கன மழையால் மதுரை வைகை தரைப்பாலம் நீரில் மூழ்கியது: பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோரிப்பாளையம் யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது:
தென் தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாகுபடி நிலங்கள் குடியிருப்புகள், கால்நடைகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேனி மாவட்டம் வைகை அணையை சுற்றி உள்ள மேகமலை, வெள்ளிமலை, வருஷநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போதைய நிலவரப்படி, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடி உயரமாக உள்ளது. இதனால், வைகை அணையின் நீர் இருப்பு 5681 கன அடியாக உள்ளது. இதனால், வைகை அணைக்கு வரக்கூடிய 3254 கன அடி தண்ணீர் மொத்தமாக உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 3வது முறையாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 3254 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.மதுரை நகர்ப்பகுதிகளில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், யானைக்கல் தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது. தரைப்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu