மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கவச சிறப்பு அலங்காரத்தில் முக்குறுணி விநாயகர்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது . பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகப் பெருமானை வழிபட்டனர் .
கி.பி .17 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தெப்பக்குளத்தை உருவாக்கியபோது அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முக்குறுணி விநாயகர் திருவுருவச்சிலை மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் தெற்குநோக்கிய பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மெகா கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடத்தப்படும் .
அந்த வகையில் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்காப்பு சார்த்தப்பட்டு , 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது .
தலா 6 படிகள் கொண்டது ஒரு குறுணி எனப்படும் அளவையாகும் . அதன்படி மூன்று குறுணிகளான 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை தயார் செய்து அந்த விநாயகருக்கு படைக்கப்படுவதால் முக்குறுணி விநாயகராக அழைக்கப்படுகிறார் .
சதுர்த்தியை முன்னிட்டு, நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில், மெகா கொழுக்கட்டை படையலை சிவாச்சாரியார்கள் தூக்கிவந்து படைத்தனர் . பூஜையில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
இதே போன்று , மதுரை நகரில் சிறப்பு பெற்ற மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள அருள்மிகு நேரு ஆலாலய விநாயகர் , ரயில்வே காலனி அருள்மிகு சித்தி விநாயகர் , காமராஜர் சாலையில் உள்ள அரசமரத்தடி விநாயகர், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர், சித்தி விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் திருக்கோயில்களிலும் வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu