மதுரை மாநகராட்சியில் சுதந்திர தின விழா : மேயர் கொடியேற்றி மரியாதை..!

மதுரை மாநகராட்சியில் சுதந்திர தின விழா : மேயர் கொடியேற்றி மரியாதை..!
X

மதுரை மாநகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் சிறந்த பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய மேயர்.

மதுரை மாநகராட்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் மேயர் இந்திராணி பொன்வசந்த் ,தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரை:

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (15.08.2023) தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலை வகித்தார்.

மேயர் பேசும்போது,

நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும்இ துன்பத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது. ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை உயிர்களை இழந்திருப்போம். எத்தனை வளங்களை வாரி கொடுத்திருப்போம். இன்றைய சமூகம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக வாழும் ஒவ்வொரு நிமிடமும் நம் செயல்களால் இந்திய திருநாட்டை வளப்படுத்துவோம்.

சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருள் ஈட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றில் பிறர் தலையீடு இன்றி வாழ்தல் என்பது சுதந்திரம் என்கின்றார்கள். மனித நேயத்துடன் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் பற்று கொள்ள வேண்டும். இன்றைய தினம் இந்திய துணைக்கண்டம் முழுவதும் சுதந்திர தினம் நம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் வளம் அளப்பரியது வடக்கே வெள்ளிப் பனிமழை முதல் தெற்கே வான்புகழ் வள்ளுவன் கோலோச்சும் குமரி முனை வரை இதன் வளத்தையும்இ செல்வத்தையும் நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்த இடைப்பட்ட நிலப்பரப்பில் பல மொழி, பண்பாடு, கலாசாரம் பழக்கவழக்கங்கள் வேறு வேறு எனினும் இந்தியர் என்பதில் ஒன்றிணைகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றைக் கோட்பாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்கும் மிகச் சிறந்த நாடாகும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கின்றோம்.

இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக நான் கருதுவது கூட்டாட்சி கருத்தியலை முன்னெடுக்கும் நமது அரசியல் சாசன சட்டம் தான். இந்தியாவின் பன்முகத் தன்மையையும், ஒருமைப்பாட்டையும், நாம் கடைப்பிடிக்கும் கூட்டாட்சி தத்துவம் இருக்கும் வரை எவராலும் நம்மை சிதைத்து விட முடியாது. இந்நேரத்தில் மத்தியல் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய தத்துவ பேராசான் மூப்பில்லா தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த கருணாநிதியை,நாம் நினைவில் போற்றுவோம் ஏனெனில்,இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் மாநிலத்தின் முதல்வர்கள் மூவண்ணக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால் அது முன்னாள் முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்த உரிமையாகும்.

இந்திய விடுதலைக்கு தங்கள் உயிரை தியாகம் செய்த நம் தேசத் தியாகிகளை போற்றுவோம் போற்றுவதோடு நமது கடமை நிறைவேறிடவில்லை. நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக் கடன் அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் பேணிக் காத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட அனைவருக்குமான சமூகநீதி, சமூகத்தை உருவாக்கிட வேண்டும். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரமான காற்று நம் எதிர்காலத் தலைமுறைக்கும் சென்றிட வேண்டுமானால் நாம் அனைவரும் நமது சமூகப் பொறுப்பை உணர்ந்து கடமையாற்றிட வேண்டும்.

இன்றைய காலகட்டம் மதுரை மாநகராட்சிக்கு மிக முக்கியமான ஒரு வளர்ச்சித் காலகட்டமாகும். மதுரை மாநகராட்சியில், சுகாதாரம், பொறியியல், கல்வி ஆகிய பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சுமார் 2000 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இதற்கு காரணமாக அயராது உழைக்கக்கூடிய நம் மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களின் அயராத உழைப்பு,நம் உழைப்பிற்கு ஈடு கொடுக்கும் விதமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நம் மாநகராட்சி அலுவலர்கள், முன்களப்பணியாளர்கள், பெரும் ஒத்துழைப்பு தரும் நம் ஆணையாளர் துணை மேயர் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று பல சாதனைகள் படைத்து பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் பெற இருக்கின்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது தமிழக முதல்வர் தலைமையில் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும் இந்த தருணத்தில் மதுரை மாநகராட்சியானது அவரின் வழிகாட்டுதலால் மாமதுரையாக பழமை மாறாத பண்பாட்டு தலைநகரமாகும் என்ற உறுதியை அளிக்கின்றேன். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்" இவ்வாறு மேயர் உரையாற்றினார்.

இவ்விழாவில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, தேசிய தரச்சான்றிதழ் பெற்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் சிற்பபாக பணியாற்றி பணியாளர்களுக்கும், பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழும், கலைநிகழ்ச்சிகளின் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

இறுதியாக அண்ணா மாளிகை வளாகத்தில் பசுமையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.

இவ்விழாவில் துணை மேயர் தி.நாகராஜன் துணை ஆணையாளர்கள் சரவணன் தயாநிதி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, வாசுகி சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், திருமலை சுரேஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை

மாமன்ற செயலாளர் சுரேஷ்குமார், கல்வி அலுவலர் நாகேந்திரன் செயற் பொறியாளர்கள், உதவிப்பொறியாளர் பொன்மணி, மாமன்ற உறுப்பினர்கள் நூார்ஜஹான், காளிதாஸ் ,எம்.சிவா, கார்த்திக், இந்திராகாந்தி, சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!