மதுரை ஆவின் விற்பனையை ரூ. 4 கோடிக்கு உயர்த்த திட்டம்: பொதுமேலாளர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆவின் பொது மேலாளர் த.எஸ்.கருணாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆவின் பொது மேலாளர் த.எஸ்.கருணாகரன் கூறியதாவது:மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். அதில், இரண்டாவதாக பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் 16.05.2021 முதல் குறைத்ததன் பயனாக, தமிழ்நாடு அளவில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. பால் விற்பனை விலைக் குறைப்பினால், தமிழ்நாடு அளவில் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.
மதுரை ஆவின் நிறுவனம் சேவை நோக்கோடு பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுத்தமானதும் புதியதுமான பால் மற்றும் தரமான பால் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்யும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். எனவே, நுகர்வோர் மத்தியில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு என்றென்றும் நன் மதிப்புண்டு. மதுரை ஆவின் நிறுவனம் நாள் ஒன்றிற்கு 180000 லிட்டர் பால் விற்பனை செய்கிறது.
பால் பொருட்கள் விற்பனை மாதம் ஒன்றிற்கு ரூ.3 கோடி வரை நடைபெறுகிறது. தற்போது ,தீபாவளி விற்பனையை எதிர்கொண்டு இந்த மாதம் ரூ.4 கோடி வரை விற்பனையை உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறைந்தது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் கூடுதல் விற்பனை செய்வதற்கான இலக்கை இந்த ஆண்டு கையாண்டுக்கொண்டு இருக்கின்றோம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுவை மிகுந்த சிறப்பு இனிப்புகான காஜூ கட்லி நட்டிஸ மில்க் கேக்ஸ மோத்தி பாக்ஸ காஜூ பிஸ்தாஸ ரோல், காபி மில்க் பர்பி உள்ளிட்ட 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதனடிப்படையில், நடமாடும் பாலகம் இயக்க முடிவு செய்து மதுரை ஆவினின் 5 விற்பனை மண்டலங்களுக்கு மண்டலத்திற்கு ஒரு வாகனம் வீதம் ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கு அனைத்து இடங்களிலும் ஆவின் பால் பொருட்கள் மற்றும் மதுரை ஆவின் நிறுவனத்தின் தூய்மையான அக்மார்க் நெய்யில் தயாரிக்கப்பட்ட ஆவின் இனிப்பு வகைகளான ஆவின் பால்கோவா ஆவின் நெய் மைசூர்பா குலோப் ஜாமுன், வெண்ணெய் ,பன்னீர். நறுமண பால், பாதாம் மில்க் பவுடர் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவற்றுடன் இந்த வருட தீபாவளி பண்டிகைக்காக, சென்னை ஆவின் நிறுவனத்தால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட புது வகையான இனிப்பு வகைகள் ஆரப்பாளையம், பழங்காநத்தம், பி.பி.குளம், அண்ணாநகர், மத்திய பால்பன்னை உள்ளிட்ட அனைத்து பார்லர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்ய அரசு முதன்மைச் செயலர் கேட்டுக்கொண்டது ஆவின் நிறுவனத்தை மேலும், ஊக்கப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் அமையும் என்றார் பொது மேலாளர் கருணாகரன். இந்நிகழ்வில், உதவி மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu