வீடுகளை காலி செய்ய மிரட்டல்: ஊராட்சி மன்றத்தலைவர் மீது ஆட்சியரிடம் புகார்
மதுரையில் 4 தலைமுறையாக வசித்துவரும் டொம்பன் இன மக்களின் வீடுகளை காலி செய்ய கூறி ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டல் விடுப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகேயுள்ள பாண்டியன் நகர் கிராமத்தில், டொம்பன் இனத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 80ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் என்பவர், பாண்டியன் நகர் பகுதியிலயே தனக்கு சொந்தமாக பல ஏக்கர் இடம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில், வீட்டுமனைகளை கட்டி விற்பனை செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியில் வசிக்கும் டொம்பன் இன மக்களின் வீடுகளை காலி செய்ய கூறி ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டல் விடுப்பதாகக்கூறி, பாண்டியன் நகர் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
80ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் வசித்துவரும் நிலையிலும், அரசிடம் பல்வேறு முறை பட்டா வழங்க கூறி கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி மிரட்டுவதாகவும், கிராம மக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட நிலையில், பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே, தற்போதயை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலை நீடிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu