மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இலவச நீராவி குளியல் சிகிச்சை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை (கோப்பு படம்)
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சனிக்கிழமை தோறும் பெண்களுக்கு, ஞாயிறு ஆண்களுக்கு நீராவி குளியல் காலை 8:00 மணி முதல் மதியம் 12 மணி வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத்துறைத் தலைவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது:-
உடலில் அதிக நஞ்சுகள் சேர்ந்தால் களைப்பு உடல் கனமாக இருப்பது போன்று அசதி ஏற்படும். உடலில் எண்ணெய் தேய்த்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள், அவரவர் தாங்கும் திறனுக்கு ஏற்ப நீராவி குளியல் எடுக்கலாம். இதன் மூலம் உடலில், உள்ள நச்சுக்கள் வியர்வையாக வெளியேறும். கை, கால், மூட்டு வலி அதிகமாக இருந்தால், புதன்கிழமைகளில் வாழை இலை சிகிச்சை அளிக்கிறோம் .
வலி இருக்கும் இடத்தில் வாழையிலை வைத்து கயிற்றால் கட்டி, வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும் . இலை கட்டிய இடத்தில் அதிக வியர்வை வெளியேறி வலி குறையும்.
இலையை நோயாளிகளே, கொண்டுவர வேண்டும். அதுமட்டுமன்றி, எண்ணெய் தடவி மசாஜ் ஒத்தடம் கொடுக்கப்படும். எண்ணை தடவல், நீராவி குளியல் சிகிச்சை அனைத்தும் இலவசம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இயற்கை முறையிலான மருத்துவ சிகிச்சைகள் அதற்கென்று பிரத்தியேகமாக உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுவது நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu