நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும் படைகள்: போலீஸ் எஸ்.பி தகவல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும் படைகள்: போலீஸ் எஸ்.பி தகவல்
X

மதுரை மாவட்ட அளவில் செல்போன்களைப் பறிகொடுத்த நபர்களுக்கு அதனை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்வில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற பதற்றமான வாக்குச்சாவடிகள் 100 எண்ணிக்கையில் உள்ளன

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைக் கண்காணிக்க பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதன் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட அளவில் செல்போன்களைப் பறிகொடுத்த நபர்களுக்கு, அதனை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேலும் கூறியதாவது:

இதுவரை திருடப்பட்ட 600 செல்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற நிகழ்வில் மட்டும் 75 செல்பேசிகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி இணை வழி பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்கு ரூ.25 லட்சம் மீட்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மீட்டுள்ளனர்.

தற்போது செல்பேசிகளைப் பறிகொடுத்த நபர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மீட்கப்பட்டவுடன் அந்தந்த வாரத்திலேயே திரும்பக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வமற்ற முறையில் வரும் ஓடிபி எண்களை உள்ளீடு செய்ய வேண்டாம். இணைய வழி பணப்பரிவர்த்தனைகளின்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுபோன்ற இணை வழி மோசடிகளில் பாதிக்கப்பட்டால் 155260 என்ற எண்ணிலும் http://www.cybercrime.gov.in இணைய தளத்திலும் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். உடனடியாகத் தீர்வும் கிடைக்கும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை மேலூர் வெள்ளாளபட்டி, திருமங்கலம், பேரையூர், தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, பரவை, சோழவந்தான் ஆகியவற்றில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுத்துள்ளோம். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற பதற்றமான வாக்குச்சாவடிகள் 100 எண்ணிக்கையில் உள்ளன. இதற்குத் தேவையான பறக்கும்படைகள் உருவாக்கப்பட்டு அதுகுறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம். அவ்வப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கும் உத்தரவுகளையும் மாவட்ட காவல்துறை கடைப்பிடிக்கும்.

மதுரை பகுதியில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறைக்கு கிடைக்கும் சிறிய தகவல்களையும்கூட உடனடியாக சரிபார்க்கப்படுகின்றன. இதுபோன்ற போதை பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags

Next Story