மதுரை மாநகராட்சியில் பொறியியல் பட்டதாரி நூதன முறையில் வேட்புமனு தாக்கல்
மதுரையில் பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர் ஜாபர் செரிப் கையில் எலிப்பொறியில் சிக்கிய ரூபாய் நோட்டு உடன் நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர் கையில் எலிப்பொறியில் சிக்கிய ரூபாய் நோட்டு உடன் நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் அதிகளவில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1-ல் உள்ள வார்டு எண் 3க்கு போட்டியிடுவதற்காக வானுர்தி பொறியாளர் (ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ்) படிப்பு முடித்த 28 வயதான இளைஞர் ஜாபர் செரிப் இன்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆப் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டியூட் என்ற பயிற்சி மையத்தில் ஏரோகிராப்ட் மெயின்டனன்ஸ் பயின்றதோடு, துபாய் விமான நிலையத்தில் விமான பொறியாளராக பணியாற்ற உள்ளார்.
முன்னதாக, வேட்பு மனுத்தாக்கல் செய்த ஜாபர் ஷெரீப் கோட் சூட் அணிந்து கையில் எலி பொறியையும், அதில் பணத்தை சிக்க வைத்தும், பொறியில் சிக்கிய எலியும், பணத்திற்கு ஓட்டை விற்ற நீயும் ஒன்று தான் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து தனது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றுவதே தனது வாக்குறுதி எனவும், படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தேர்தலுக்கு பணத்தை பெற்று எலிப்பொறியில் சிக்கிய எலியை போல மாட்டிக்கொள்ள வேண்டாம் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu