மதுரையில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை ஆட்சியர் அலுவலக சாலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து, தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகராக இராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் அவர்கள் அவரது உதவியாளர் மூலம் அமைச்சரை பார்க்க வருமாறு இராஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், சிவகங்கையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்குச் சென்றபோது, அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலரை, சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக பி.டி.ஓ. ராஜேந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துதுறை அமைச்சர் பதவியில் இருந்த ராஜகண்ணப்பன் அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், தமிழக தேவேந்திர குல வேளாளர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்தும், அவரை தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுவெளியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu