மதுரை நகரில் அனுமதி பெறாத கடைகளை அகற்றுவதில் மாநகராட்சி தீவிரம்

மதுரை நகரில் அனுமதி பெறாத கடைகளை அகற்றுவதில் மாநகராட்சி தீவிரம்
X
மதுரையில், அனுமதி பெறாத கடைகள், மற்றும் ஆக்கிரமிப்புக்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றவேண்டும் என, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பகுதிகளில், அனுமதி பெறாமலும், ஆக்கிரமிப்பு செய்தும், காலாவதியான அனுமதி அடிப்படையிலும் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள், நிரந்தர மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் ஆகியவற்றை இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே அகற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பகுதிகளான - சின்னக்கடை தெரு முழுவதும், அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து செம்பூரணி வரை மற்றும் அவனியாபுரம் பேருந்து நிலையம், கீழமாரட் வீதி, அரசு இராசாசி மருத்துவமனை முன்புறம், சுகுணா ஸ்டோர் ரோடு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புக் கடைகளால், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, காவல்துறையால் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட இடங்களிலும் மாநகராட்சி பராமரிப்பில் இருக்ககூடிய பிற அனைத்து பகுதிகளிலும் அனுமதி பெறாமல், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுமானங்கள் மற்றும் பெட்டிக்கடைகளை, இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அகற்றாவிடில், மாநகராட்சி மூலமாக அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai future project