மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆணையர் ஆய்வு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆணையர் ஆய்வு
X

பைல் படம்

பணியில் அங்கன்வாடி , ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் 1800 பேர் ஈடுபட்டனர்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, ஆணையாளர்கா.ப.கார்த்திகேயன் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கொரோனா மூன்றாம் அலையை தடுத்திடும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ,கடந்த செப்டம்பர் 12, 19, 26 அக்டோபர் 3ம் தேதி என மொத்தம் 4 கட்டங்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் சுமார் 87 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் இடங்களில் 5ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வாக்குசாவடி மையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம், சுமார் 500 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான முனிச்சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வண்டியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, மஸ்தான்பட்டி நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடைபெற்று வந்த கொரோனா சிறப்பு முகாமினை, மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டார்.

இம் முகாமில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளும், தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 1800 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுமார் 75,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவற்றில் முதல் பரிசாக ஒரு நபருக்கு வாசிங் மெஷின், இரண்டாவது பரிசாக 2 நபர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைலும், மூன்றாவது பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர்களும், சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இந்த ஆய்வில், கண்காணிப்பு அலுவலர்கள், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!