மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
மதுரையில் அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக பொதுமக்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், கோடை வெயில் மற்றும் அனல் காற்று அதிகமாக வீசுவதால் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். கோடை வெயிலில், அதிக உஷ்ணநிலையில் இருப்பதால், கடுமையான வேலைகளை தவிர்க்கவும்.பயணம் செல்லும் பொழுது, குடிநீரை கொண்டு செல்லவும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையும், கால்நடைகளையும் அனுமதிக்க வேண்டாம்.
மயக்கமான நிலை அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை செல்ல வேண்டும்.
தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். ஒ.ஆர்.எஸ். என, வீடுகளில் தயாரிக்கும் லஸ்ஸி, அரிசி கஞ்சி எலும்மிச்சம் பழச்சாறு மற்றும் மோர் ஆகியவைகளை பருவி நீரிழப்பைத் தவிர்க்கவும்.
தற்பூசணி, நுங்கு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தவும். கால்நடைகளை நிழல் உள்ள இடத்தில் நிறுத்தவும், மற்றும் அவைகளுக்கு அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதற்க்கு கொடுக்கவும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூர் கேபிள் டிவியில் கோடை வெயிலின் தாக்கம் குறித்து செய்திகள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து வட்டத்தில் கோடை வெயிலின் தன்மை குறித்து விளம்பரங்கள் மற்றும் பிட் நோட்டீஸ், முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் :1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.
குளிர் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள், ஒரு வார காலத்திற்க்கு உஷ்ண நிலையினை தங்களது உடம்பு ஏற்றுக் கொள்ளும் வரை உடனடியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். வெளியில் உள்ள உஷ்ணநிலை தங்களுக்கு சாதகமாக மாறும் வரை தங்களை பாதுகாத்துக் கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu