மதுரையில், சித்திரைத் திருவிழா, முன் ஏற்பாடு: ஆலோசனைக் கூட்டம்
சித்திரை திருவிழா தொடர்பாக மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற்றது.
மதுரை மாநகரில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்திட மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சித்திரை திருவிழா எதிர்வரும் 23.04.2023 முதல் 07.05.2023 வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளான தினந்தோறும் அருள்மிகு மீனாட்சியம்மன் நான்கு மாசிவீதிகளில் வீதியுலா வருதல் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கும், திருவிழாவினை காண்பதற்கும், மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்வார்கள். அருள்மிகு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வசதி, தகவல் மையம், சி.சி.டி.வி. கேமிரா, தன்னார்வலர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கு திருவிழாவினை காண்பதற்கு எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் மருத்துவ சேவை வழங்குதல் அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சித்திரை திருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், காவல் துணை ஆணையர் அர்விந்த், துணை மேயர் நாகராஜன் போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன் செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர் இராமசாமி, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன் வரலெட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், சுகாதார அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புத் துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu