மதுரையில் முழுமையான திட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் கருத்து கேட்புக் கூட்டம்

மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் மதுரை முழுமைத்திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், முதலமைச்சர் உத்தரவின் படி நடைபெற்று வருகிறது.சுமார் 25 கி.மீ சுற்றளவிற்கு மதுரை முழுமைத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். புதியதாக சுற்றுச் சாலை அமைத்து அதனருகிலேயே தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. குறைவான சம்பளத்தில் தரமான வேலை செய்யக் கூடிய ஆட்கள் மதுரை மாவட்டத்தில் உள்ளார்கள். எனவே, தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சரியான நகராமாக இத்திட்டம் முழுமையாக பயன்படுத்தப்படும்.
மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. சமீபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பெருமை சேர்த்தார். இதுபோன்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளை மேலும் ஊக்குவிப்பதற்காக விளையாட்டு அரங்கங்கள் மேலும் மேம்படுத்தப்பட உள்ளன. 25 ஆண்டுகாலம் பின் தங்கியுள்ள மதுரை மாவட்டத்தை முழுமை திட்டத்தின் கீழ் அனைவரது ஆலோசனைகளையும் பெற்று மிகவிரைவில் மேம்படுத்தப்படும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக சுமார் 600 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.கிரானைட் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பேசியதாவது: இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு நல்ல கருத்துக்களை கூறிய சமூக ஆர்வலர்கள், வல்லுநர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவரது கருத்துகளும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். வெளிநாடுகளில் இதுபோன்ற முழுமைத்திட்டம் 50 ஆண்டுகளுக்காக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் புதுப்பிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 1996 முதல் 2001 வரை பல்வேறு திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் மாட்டுத்தாவணி மற்றும் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மதுரை மாவட்டத்தில் கொண்டுவருவதே என்னுடைய முக்கிய நோக்கமாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோயில் வளாகத்திற்குள் புகைப்படக்கருவிகள் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். பொது நன்மைக்காக மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகரின் ஒருசில இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திட்டங்களை செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகராட்சி ஆணையாளர் .கா.ப.கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்) , வி.வி.ராஜன்செல்லப்பா (திருப்பரங்குன்றம்) ,பெரியபுள்ளான் என்ற செல்வம் (மேலூர்) , அய்யப்பன் (உசிலம்பட்டி) , நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் விஜயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu