மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: கற்களை வீசி தாக்குதல்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: கற்களை வீசி தாக்குதல்
X

மதுரை மத்திய சிறையில் கைதிகள் சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல். பிளேடால் கீறி காயப்படுத்தியும், கற்களை வீசியும் தாக்குதல்.

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் - பிளேடால் உடலில் காயப்படுத்தியும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.

மதுரை அரசரடி அருகே புதுஜெயில்ரோடு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்நிலையில், சிறையில் முதல் தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மதியம் உணவு இடைவேளையின்போது சாப்பிட வந்த சிறைவாசிகள் இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சிறைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய சிறைவாசிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்தியதோடு, சிறைச்சாலையில் சுவர்களில் ஏறிநின்று கற்களை சாலைகளை நோக்கி வீசி எறிந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், புது ஜெயில் சாலை போக்குவரத்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைத்துறை காவலர்கள் அழைத்துசென்று சிறையில் அடைத்தனர். மேலும், மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறை வளாக மருத்துவர் மூலமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் 2019 ஆம் ஆண்டு சிறைவாசிகள் அடிப்படை வசதிகள் கோரி, சிறைவாசிகள் சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது, மீண்டும் சிறை வளாகத்திலயே சிறைவாசிகள் பாட்டில்கள், கற்களை எறிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைவாசிகள் மோதலை தொடர்ந்து, சிறை வாளகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!