மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரைத்திருவிழா கொடியேற்றம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்:நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். உலகமே கொண்டாடும் மதுரையின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் இந்திராணி பொன் வசந்த் ,காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இனி தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30-ல் நடைபெறும். மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறும். 6 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல், ரூ.500 கட்டணச்சீட்டு 2500 பேர், ரூ.200 கட்டணச் சீட்டு 3500 பேர், அரசு ஊழியர்கள் 1000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.
அடுத்த நாள் மே 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். பொதுமக்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் 20 இடங்களில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்படவுள்ளன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். முக்கிய விழாவான மே 5-ம் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu