கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் நிறுத்தியிருந்த டூ வீலர் அபேஸ்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இருசக்கர வாகன திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு
மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை, ஆட்சியரக வளாகத்தின் உள்ளே உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தின் வெளியே நிறுத்தி விட்டு, அலுவலகத்துக்கு சென்று விட்டார்.
பணி முடிந்து மதியம் வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீஸார் விசாரிகத்து வருகின்றனர். மேற்கண்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது டிப் டாப்பாக வந்த அடையாளம் தெரியாத ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
ரமேஷ் கண்ணன் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து தல்லாகுளம் காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை தேடி வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பொருத்துவதின் அவசியத்தை இந்த இருசக்கர வாகன திருட்டு உணர்த்துகிறது. சிசிடிவி கேமரா இருந்ததால் திருடன் அந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது அழகாக தெரிகிறது. முதலில் பூட்டை திறந்துவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் சென்று ஏதோ பார்த்துவிட்டு வந்து, ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வது தெரிகிறது.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம் ஆகும். அரசு அலுவலர் என்பதால் நிச்சயமாக காவலர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், சாமான்ய மனிதர்களுக்கு ஏற்பட்டால் பாவம் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள்.
மாவட்ட ஆட்சியர் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu