புத்தகப்பூங்கா: முதல்வர் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு
பைல்படம்
புத்தகப்பூங்கா: முதல்வர் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதை தமுஎகச மனதார பாராட்டி வரவேற்கிறது.அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கவும் அனைத்துப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகவிரும்பிகளும் ஒரே இடத்தில் சந்திக்கவும் ஏதுவாக புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் முன்பொரு முறை வெளிப்படுத்திய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவதாக இன்றைய முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று இந்த புத்தகப் பூங்காவிற்கான நிலத்தைத் தேர்வு செய்து அரசு வழங்குவதுடன், தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் அரசு செய்யும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது, தமிழ்ப் பதிப்புத்துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் என தமுஎகச கருதுகிறது. இதன் தொடர்ச்சியில் மாவட்டத் தலைநகரங்களிலும் மாநகராட்சிகளிலும் நிரந்தர புத்தக விற்பனை வளாகங்களை அமைப்பதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu