மதுரை வீதிகளில் யானையை வைத்து யாசகம் பெறும் சம்பவத்தால் சர்ச்சை
யானை மூலம் யாசகம் (மாதிரி படம்)
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் திருவிழாக்களின் போதும், செல்வந்தர்கள் வீட்டு இல்ல விழாக்களில் விருந்தினர்களை வரவேற்க யானைகளை பயன்படுத்தி வந்த நிலையில் யானை வளர்ப்பாளர்கள் தற்போது போதிய வருவாய் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், மதுரையில் உள்ள வீதிகளில் வளர்ப்பு யானையை அழைத்துக்கொண்டு வந்து பொதுமக்களுக்கு யானையிடம் ஆசிபெறவும், துதிக்கையில் தண்ணீர் ஊற்றி பீய்ச்சி அடிக்க வைத்தும் பணம் சம்பாதிப்பது, அதன் மூலம் யாசகம் பெற்று வருவது உள்ளிட்ட செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி, யானைகளை வைத்து பொது மக்களை ஆசீர்வதிக்க வைத்து பணம் பெறுதல், யாகம் பெறுவது என்பது குற்றமாகும். எனவே, அந்த விதிகளை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் கண்டிப்புடன் அமல்படுத்தி, யானைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் யானைகளை தனி நபர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை வீதிகளில் யானையை வைத்து யாசகம் பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu