இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள்
மதுரை மாவட்டம், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவித்தார்.
வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர், 2022-2023-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என, அறிவித்ததனைத் தொடர்ந்து, தோட்டக்கலை பயிர்களில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் முதல் பரிசாக ரூ.100000ம் இரண்டாம் பரிசாக ரூ.60000-ம் மூன்றாம் பரிசாக ரூ.40000ம் வழங்கப்பட உள்ளது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத்துறை அளிக்கும் நடப்பிலுள்ள "வாய்ப்பு" சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். விருதிற்கான விண்ணப்பத்தினை விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யலாம். பங்கேற்கும் விவசாயிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலமாகவும் இருக்கலாம். கடந்த ஆண்டு இதே விருதிற்காக விண்ணப்பித்த விவசாயிகள் நடப்பு ஆண்டில் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
இவ்விருதிற்கு விண்ணப்பித்த விவசாயிகளின் வயல்கள் மாவட்ட ஒப்புதல் குழுவால் கள ஆய்வு செய்யப்பட்டு விண்ணப்பம் மாநில ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகலுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.100- கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu