சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மதுரை சாலைகளில் 'ஜல்லிக்கட்டு' ஆடும் மாடுகள் அடிக்கடி நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.
மதுரை கூடல்நகரில், சாலையின் குறுக்கே திரியும் மாடுகள் மீது மோதியதில் கார் கவிழ்ந்தது. பள்ளிகள் திறப்புக்குப் பிறகு மீண்டும் நகர் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சாலைகளில் மாடுகள் தூங்குவதும், குறுக்கும் நெடுக்குமாக ஜல்லிக்கட்டு போல் பாய்வதுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், சாலைகளில் செல்வோர் காயமடைவதோடு, வாகனங்களும் சேதமடைகின்றன.
கூடல் நகர் பகுதியில் சாலையின் குறுக்கே பாய்ந்த மாடுகள், சாலையில் வந்து கொண்டிருந்த காரின் மீது மோதியதில், நிலைதடுமாறி தலைகீழாகக் கார் கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. முன்பு, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்த மதுரை மாநகராட்சியும், காவல்துறையும் தற்போது, அந்த நடவடிக்கையை கைவிட்டதால், மதுரை சாலைகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்து பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர். மதுரையில் மாடுகளை வளர்ப்போர் முன்புபோல் தற்போது மாடுகளை வீடுகளில் கட்டிப்போடுவதில்லை. மேய்ச்சலுக்கும் அழைத்துச் செல்வதில்லை. காலையில் பால் கறந்துவிட்டு, வைகை ஆறு மற்றும் கண்மாய்களை நோக்கி அவிழ்த்து விடுகின்றனர்.
மாடுகள் அங்கு மேய்ந்துவிட்டு நகர் பகுதி சாலைகளில் புகுந்து விடுகின்றன. கூடல்நகர், பைபாஸ் சாலை, கோச்சடை சாலை, எல்லீஸ் நகர் சாலை, திருவாதவூர் சாலை, ஒத்தக்கடை சாலை, மாட்டுத்தாவணி சாலை, கே.கே.நகர் சாலை உட்பட நகரின் அனைத்து சாலைகளிலும் மாடுகள் கட்டுப்பாடின்றி நடமாடுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu