மதுரை ரயில்வே கோட்டத்தில் முறைகேடாக டிக்கெட் விற்பனை செய்த 90 பேர் கைது
பைல் படம்
ரயில் நிலையங்களில், ரயில்களில் குற்றங்களை தடுக்க, பயணிகளை பாதுகாக்க, பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்ய, மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை பாடுபடுகிறது.மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடந்த ஆண்டு மதுரை கோட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை கோட்டத்தில், ரயில் பயண சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 15.44 லட்சம் மதிப்புள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட புகையிலையை ரயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, போலி மது பாட்டில்கள் கடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. ரயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்திய எட்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 4.82 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
ரயில்வே சட்ட விதிகளை மீறிய பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூபாய் 15.94 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4684 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூபாய் 9.66 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள் தவறவிட்ட ரூபாய் 42.45 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்த 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் குற்ற செயல்கள் அகில இந்திய அளவில் ரயில் பயண சீட்டுகளை முறைகேடாக விற்ற 5179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயண சீட்டு வழங்க உருவாக்கப்பட்ட 140 சட்டவிரோத மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது. ரயில்களில் ரூபாய் 80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை ரயில் நிலையங்களில்17,756 சிறுவர் சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே சொத்துக்களை அபகரித்த 11268 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 7.37 கோடி மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 194 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 559 அப்பாவிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயில்களில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது ரயில்வே பாதுகாப்பு படை
ரயிலில் தவறவிடப்பட்ட ரூபாய் 46.5 கோடி மதிப்புள்ள 25500 உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக 640 ரயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் கொண்ட "என் தோழி" என்ற பெயரில் குழுக்கள் பயணித்து வருகிறது. ஓடும் ரயில்களில் 209 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த தாய்மார்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் பக்கபலமாக உதவிகரமாக இருந்துள்ளனர். 37000 முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பயணத்தில் காயமடைந்தோர் ஆகியோருக்கு கருணையுடன் உதவிக்கரம் நீட்டி உள்ளது ரயில்வே பாதுகாப்பு படை. தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட்டு சுதந்திரமான தேர்தல் நடைபெற உதவியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu