மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: நிதி அமைச்சர் நேரில் ஆய்வு
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துதல், புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.44.20 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகத்தில், நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல அடுக்கு வாகன (110 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில்) நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், புராதன சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.174.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் மேற்கூரை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், இப்பேருந்து நிலையத்தில் சுமார் 57 நகரப்பேருந்துகள் வந்து செல்வதற்கும், தரைதளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் சுமார் 462 கடைகளின் கூடிய வணிக வளாகமும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தரைத்தளத்திற்கு கீழ் முதல் தளத்தில் 371 நான்கு சக்கர வாகனங்களும், தரைத்தளத்திற்கு கீழ் 2வது தளத்தில் சுமார் 4865 இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்று முகப்பு மேம்பாட்டு பணிகளான ஆற்றுப்படுகையை சமப்படுத்துதல், ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின் இருபக்க கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டுதல், சாலைகள் அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், பசுமை பகுதியை உருவாக்குதல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார அமைப்புகள் ஏற்படுத்துதல், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பணிகள் ரூ.84.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, வைகை ஆற்றின் தென்கரை சாலை பகுதியில் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் இருகரைகளிலும் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர்கள் அரசு, கருப்பாத்தாள், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவிசெயற்பொறியாளர்கள் மனோகரன், ஆரோக்கியசேவியர், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள் தியாகராஜன்,ஆறுமுகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu