பெரியார் பஸ் நிலைய பயன்பாடு: மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை

பெரியார் பஸ் நிலைய பயன்பாடு: மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை
X

மதுரை பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று, மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு, மேற்கூரை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்து நிலையத்தில், நகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கான நிறுத்தப்பகுதிகளும், தரைத் தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக லிப்ட், எஸ்குலேட்டர், நடைப்பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மழைநீர்; சீராக செல்வதற்கு, வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், கட்டுமானம் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், காவல் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வில், நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர் கருப்பாத்தாள், துணை ஆணையர் (போக்குவரத்து) ஈஸ்வரன், தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் ரவிக்குமார், நடராஜன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story