மீனாட்சி கோவில் யானைக்கு சிகிச்சை; தமிழக நிதியமைச்சர் பார்வை
சிகிச்சை பெறும் யானைக்கு பழங்களை வழங்கும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்ற 25 வயது நிரம்பிய பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த யானை, கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்கேற்பதும் அன்றாடம் அம்மனுக்கும் , சுவாமிக்கும் அபிஷேகம் செய்வதற்காக மதுரை வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த பல மாதங்களாக பார்வதி யானையின் இடது கண்ணில் வெண்புரை கோளாறு ஏற்பட்டது. அதனால், யானையின் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்ததுடன் , கண் பார்வை குறைபாட்டுடன் கண்ணில் வலி ஏற்பட்டு யானை சற்று சோர்வாக இருந்துள்ளது.
இதனையடுத்து, மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில், அரசு உத்தரவின் பேரில் மருத்துவர்கள் குழு அளித்த சிகிச்சையில், யானையின் இடது கண்ணில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கால்நடை மருத்துவர்கள் ஆலோசனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறை அறிவியல் பல்கலைகழக குழுவை சேர்ந்த மருத்துவக்குழு , மதுரை மாவட்ட கால்நடை துறையினர் அடங்கிய சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக கொண்டு வந்து யானைக்கு கண் சிகிச்சை அளித்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு நடத்திய போது , கோவில் யானை பார்வதியின் கண் சிகிச்சைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் முறையாக சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர், யானையின் இரண்டு கண்களிலும் சிறப்பு கண் சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்த சில சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, தொடர்ந்து யானைக்கு கால்நடை மருத்துவர்கள் பரிந்துரையின் படி, காலை மற்றும் இரவு என இரண்டு வேளையிலும் கண்ணில் சொட்டு மருந்து செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடர் சிகிச்சையின் பலனாக யானையின் இடது கண்ணில் இருந்து வந்த வெண்ப்புரை பாதிப்பு 30% குணமடைந்து, யானையின் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தனது குடும்பத்தாருடன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் யானை பார்வதியின் பார்வைகள் குறைபாட்டில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கோவில் இணை ஆணையர் செல்ல துறையிடம் கேட்டறிந்து, யானையை பார்வையிட்டார்.
தொடர்ந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கியவர், யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், கோவில் யானைகளுக்காக இந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் மேலும் சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் யானை பார்வதியுடன், புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும், யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்திற்கும் வாரந்தோறும் கோவில் நிர்வாக தரப்பில் இருந்து சிகிச்சை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu