மதுரையில் இல்லங்களுக்கு சென்று மருந்து பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்கள்

மதுரையில் இல்லங்களுக்கு சென்று மருந்து பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்கள்
X

மதுரையில் மக்களைதேடி மருத்துவ திட்ட வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த  நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.

மாநகராட்சியின் மண்டலம் 4 பகுதிகளில் சுமார் 686 நபர்களுக்கு மருத்துவ பெட்டகம் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் வழங்கப்பட உள்ளது

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று மருந்து பெட்டகங்களை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் இல்லங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வாகன சேவையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகர், ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில், அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது::

தமிழ்நாடு முதலமைச்சரால், தொடங்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி வார்டு எண்.25 கண்ணனேந்தல் பகுதியில் இன்று துவங்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம், மாநகராட்சியின் இதுவரை இணை நோய் உள்ள 23424 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, கடந்த 12.9.2021 அன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

சுமார் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அன்றைய தினம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த மருத்துவ திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்துத் சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன், தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை தடுத்திடும் வகையில், மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மதுரை மாவட்டம், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என தெரிவித்தார். அதன்படி, மதுரை மாநகராட்சி மண்டலம் 2, கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் இல்லங்களுக்கு சென்று மருந்துகள் வழங்கும் வாகன சேவையினை, அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்து அப்பகுதிகளில் உள்ள பயனாளிகளின் வீட்டிற்கு சென்று மருந்து பெட்டகங்களையும், பிசியோதெரபி முறையில் பயனாளிக்கு சிகிச்சை அளிப்பதையும் பார்வையிட்டார்.


நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசியதாவது: தமிழ்நாட்டில், மருத்துவ சேவைகள் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்மை சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த சேவையை, மேலும் விரிவுப்படுத்தி ஒவ்வொரு வீட்டிற்கே சென்று மருத்துவ சேவை வழங்குவதற்கு இந்த திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தற்போது ,மட்டும் 19 நபர்களுக்கு பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் மண்டலம் 4 பகுதிகளில் சுமார் 686 நபர்களுக்கு இந்த மருத்துவ பெட்டகம், ஒவ்வொருவரின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட உள்ளது.இதில், சர்க்கரை மாத்திரைகள், பிரஷர் மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இதில் உள்ளடங்கும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த மருத்துவ சேவைத் திட்டம் அனைத்து மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று, தமிழக அரசால் நல்ல திட்டங்கள், சேவைகள் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை மாநகராட்சி மண்டலம் 4 சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை பகுதி, தைக்கால் 3-வது தெருவில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாக ராஜன் வழங்கினார்.

மதுரை மாநகராட்;சி பகுதிகளில் உயர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட 8488 நபர்களும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 6123 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 8813 நபர்களும், உடற்பயிற்சி சிகிச்சை 625 நபர்களுக்கும் அளிக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தின் மூலம், மருந்துகள் வழங்குவது, இயன்முறை சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை ஆகியன பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் முருகேசபாண்டியன், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத்குமார், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் பொன்மணி, மருத்துவர்கள், செவிலியர்கள், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!