மதுரை பெரியார் பஸ்நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: மதுரை எம்.பி
மதுரை பெரியார்பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்
பெரியார் பேருந்து நிலையம் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை ரூ.167 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் காத்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், எம்.பி. சு.வெங்கடேசன் அளித்த பேட்டி : எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மதுரை பெரியார் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை திட்டமிட்ட முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகள் குறித்து விசாரிக்கப்படும். பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டதை விட அதிகமான காலம் எடுத்துள்ளது. கால தாமதம் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பேருந்து நிறுத்தம் செய்யும் பணிகள் 1 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து, பெரியார் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் நேரடியாக வந்து செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை ரயில்வேதுறை தயாரித்து வருகிறது.
எல்லீஸ் நகர் பாலத்தில் ஒரு இணைப்பு ஏற்படுத்தி, பேருந்து நிலையம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். அதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பேருந்து நிலைய கட்டமைப்பு, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என விமர்சனங்கள் உள்ளன. மொத்தமாக 57 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் வசதிகள் உள்ள நிலையில், வணிக பயன்பாட்டிற்கான இடம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட குளறுபடி தொடர்பாக, செப்.17 ஆம் தேதி நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார் எம்பி. வெங்கடேசன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu