அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு : முன்னாள் அமைச்சர்  குற்றச்சாட்டு
X
அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் மக்களை அரசு அழைக்கழிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் "மதுரையில் அசாதாரண சூழல் உள்ளது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வமாக உள்ளார்கள், ஆனால் ஊசி எப்போது வரும் என்பது அரசுக்கே தெரியவில்லை. ஊசி செலுத்துவது தொடர்பாக அரசு சரியான விபரங்களை வெளியிடவில்லை. முக கவசம் எப்படி போடுவது என முதலமைச்சர் விளக்கிக் கொண்டிருக்கிறார். அது எல்லோருக்கும் தெரியும்.

தடுப்பூசி வாங்குவதில் முதலமைச்சர் சாணக்கிய தனமாக பேச வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" எனக் கூறினார்.

மேலும் "இறந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் 10 லட்சம் அறிவித்து உள்ளார், ஆனால் முதல்வர் 5 லட்சம் கொடுத்து உள்ளார். எங்களுடைய ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இப்போது 5 லட்சம் கொடுப்பது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

"மதுரையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் தரப்படுவதே இல்லை. இறப்பு சான்றிதழின் இறப்பிற்கான காரணம் இடம் பெறாது என அரசு மருத்துவமனை அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் டி எஸ் பி மகன் மறைவுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

டீனிடம் விளக்கம் கேட்டதற்கு, முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இது என்ன துக்ளக் ஆட்சியா?" எனக் கூறினார்.

"கூட்டுறவு கடன் தள்ளுபடி முறைகேடு தொடர்பான கேள்விக்கு, கூட்டுறவு துறையை பற்றி ஐ.பெரியசாமிக்கு ஒன்றும் தெரியாது. அவரே விருப்பம் இல்லாமல் தான் இந்த துறையில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததில் வெளிப்படை தன்மை உள்ளது.

தவறு செய்தவர்கள் மீது ஏற்கனவே, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்னுடைய துறையில் குறை இல்லை; அதை ஐ.பெரியசாமி ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நான் சட்டமன்றத்தில் விவாதிக்க தயார்" எனக் கூறினார்.

Tags

Next Story