காலாவதியான ஆவின் ரசகுல்லா விநியோகம்..!?
ஆவின் ரசகுல்லா -கோப்பு படம்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுரை ஆவினில் (ஆரப்பாளையம் மண்டலம்) இன்று 28.10.2024க்கான பால் பாக்கெட்டுகள் கொள்முதலுக்கு 27.10.2024ம் தேதி மாலை பணம் செலுத்த நேரில் சென்ற ஒவ்வொரு பால் முகவர்களுக்கும் தீபாவளி இனிப்பான ஆவின் ரசகுல்லா கேன்கள் இரண்டினை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.
அதனை வாங்க மறுத்த பால் முகவர்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆர்டர் போட மறுத்த காரணத்தால் வேறு வழியின்றி பால் முகவர்கள் அந்த ரசகுல்லா கேன்களை வாங்கி தங்களின் பாலகங்களுக்கு கொண்டு வந்த பிறகு தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் பால் முகவர்களுக்கு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வழங்கிய ஆவின் ரசகுல்லா கேன்களில் ஒன்று காலாவதியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ளது. அதன் தயாரிப்பு தேதி 06.09.2024. காலாவதி தேதி 20.09.2024. மற்றொன்று காலாவதியாகி இரண்டு நாட்களாகிறது. தயாரிப்பு தேதி 11.10.2024. காலாவதி தேதி 25.10.2024. இவ்வாறு ஆவின் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வழங்கிய ஒரு மாதத்திற்கு முன்பே காலாவதியான ஆவின் ரசகுல்லா கேன்களை விற்பனை செய்ய முடியாமலும், ஆவினில் திருப்பி கொடுக்க முடியாமலும் பால் முகவர்கள் சொல்லெனா துயருக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் மற்றும் பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவது, தட்டுப்பாடின்றி அதன் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆண்டுதோறும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
காரணம் தீபாவளி இனிப்பு, கார வகைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் கொள்முதல், அவை தயாரிப்பதற்கான பணியாளர்கள் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் மூலம் எண்ணற்ற முறைகேடுகள் பல செய்து தங்களின் கஜானாவை நிறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மட்டுமே ஆவின் அதிகாரிகள் செயல்பட்டு வருவதால் தான் இந்த நிலை தொடர்கிறது.
இதனால் பால் முகவர்களும், பால் உற்பத்தியாளர்களும் ஆண்டுதோறும் பலிகடாவாக்கப்பட்டு வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், காலாவதியான ரசகுல்லா கேன்களை பால் முகவர்களுக்கு வலுக்கட்டாயமாக வழங்கிய ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu