மதுரையில் பூ வியாபாரிகளுக்குள் தகராறு: 2 பெண்கள் கைது
பைல் படம்.
பூ வியாபாரிகளுக்குள் தகராறு: இரண்டு பெண்கள் கைது
அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லட்சுமி 67. ஜெய்ஹிந்த்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 50. இவர்கள் இருவரும் தெற்கு சித்திரை வீதியில் நகைக்கடை பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரம் செய்வதில் அவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக ஆபாசமாக பேசி தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து லட்சுமி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவருடன் தகராறில் ஈடுபட்ட பாக்கியலட்சுமியை கைது செய்தனர் . பாக்கியலட்சுமி கொடுத்த புகாரில் வழக்குபதிவு செய்து லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
கோயில் பாப்பாக்குடி காமாட்சி தெருவை சேர்ந்த ரமேஷ் மனைவி தேன்மொழி 42. இவர் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான டையாலிசிஸ் சிகிச்சை செய்து வந்தார். இந்த நிலையில் வண்டியூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகன் செல்வகுமார் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தேன்மொழியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண ஆசை காட்டி இளம் பெண் கற்பழிப்பு: வங்கி ஊழியர் கைது
தத்தனேரி களத்துப்பொட்டல் பர்மாகாலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அந்தோணிராஜ் 29 .இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் மாடக்குளம் பெரியார் நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் . அந்தப் பெண் கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஒரு வருடமாக பழகி வந்தார். இந்நிலையில் அந்தோணிராஜ் அந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனையடுத்து அந்தோணிராஜ் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த அந்த இளம் பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த வங்கி ஊழியர் அந்தோனிராஜை கைது செய்தனர்.
லோடுமேன்களை தாக்கி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது
மதுரை டெய்சி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் தினேஷ் குமார் 22. இவர் லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்க்கும் சக லோடுமேன்களுடன், திடீர்நகர் ரேஷன் கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சொக்கலிங்கநகர் ஒன்பதாவது தெருவை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் மற்றும் 3 சிறுவர்கள் அவர்களை தாக்கி அவர்களிடமிருந்து செல்போனையும்,ரூ 900 ஐயும் வழிப்பறி செய்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ் குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .பின்னர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை கைது செய்தனர். மற்றொரு நபர் ஸ்டீபன்ராஜை தேடி வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:
செல்லூர் போஸ்தெருவை சேர்ந்தவர் கனக சபாபதி மகன் இளவரசன் 37. இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. இந்த நோய் மனைவிக்கு பரவாமல் இருக்க அவரை பிரிந்து இருக்கும்படி கூறியுள்ளார். நோய் காரணமாக மனைவியை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் மற்றவர்களுக்கு நோய் வராமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வருந்தினார். இதனால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவர் மனைவி வீரலெட்சுமி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபர் இளவரசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu