அழகர்கோவில் சித்திரை விழா - கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு
மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா, கடந்த 23ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் புறப்பாடுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி, ஆகம விதிப்படி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள் பிரகாரத்தில் நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வாக நேற்று காலை 10 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைகை ஆறு, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, கருட வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது.
இதை தொடர்ந்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்திற்குள் ஆடி வீதி எனும் நந்தவனத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு மண்டூக மகரிஷி மோட்ச நிகழ்வுக்காக, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு வாய்ந்த கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக அமைக்கப்பட்ட 3 அடி உயர மண்டூக மகரிஷி முனிவர் சிலை, அழகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு கள்ளழகர் முன் காட்சிப்படுத்தப்பட்டு, சாப விமோசனம் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் இன்று பூப்பல்லாக்கு நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu