ஆவின் நிறுவனத்தில் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை : நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழகத்தில் உள்ள 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, அதிமுக ஆட்சியில் தேர்வு ஏதும் நடத்தப்படாமல் பணி நியமனங்கள் நடைபெற்றது. ஆட்சியர் இருப்பவர்கள் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாக புகாரகள் தெரிவிக்கப்பட்டன.
இதுதொடர்பாக, திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால் வள துணைப் பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
மேலும், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பவ்னீத் சூர்யா, ராஜசேகர், ஏழுமலை உள்ளிட்ட 25 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் நீடிக்கும் நிலையில், ஆவின் நிறுவனம் எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், பணி நீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல், ஒன்றியத்தின் பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், பணி நீக்க உத்தரவுக்கு தடை விதித்து, பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு எனக் கூறி, வழக்கு தொடர்ந்திருந்த 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu