நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
X

சென்னை உயர்நீதிமன்றம்.

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து நடிகர் விஜய் சேதுபதியை மகா காந்தி என்ற நபர் திடீரென தாக்கினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, மகா காந்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் மகாகாந்தி மனு தாக்கல் செய்து இருந்தார்.


அந்த மனுவில், நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சைதாப்பேட்டை கோர்ட்டில் மகா காந்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!