சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
பயிர் காப்பீடு
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்.15 முதல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது.
இதுவரை 11 லட்சம் விவசாயிகள் மூலம் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை பெய்துவரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு,திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவ.15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 21-ம் தேதி வரை மத்திய அரசு நீடித்தது. அதன்படி, பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் எனவும் இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யது கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே பயிர் சேதம் பற்றி முழுமையாக தெரியவரும் எனவும் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu