வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15 கடைசி நாள் - வேளாண்துறை அறிவிப்பு
மாதிரி படம்
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யும் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபடலாம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் குறைந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழை, கரும்பு, பருத்தி, உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி, தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் காரீப் 2021இல் செயல்படுத்த அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமாக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட வலங்கைமான் வட்டாரத்தில் ஆவூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே குருவை பருவத்தில் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை 3180 ரூபாயை தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் மூலமாகவோ, தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்ளலாம்.
மேலும் கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அல்லது தேசிய வங்கியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் எண் 8489364388, உதவி தோட்டக்கலை அலுவலர் எண் 7975731586 உள்ளிட்ட தொலைபேசி எண்கள் மூலம் விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். வாழை பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ஆகும் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பாதுகாக்க காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu