'நவீன பெண்ணியத்தின் அடையாளம்' குந்தவை நாச்சியார்..!
Kundavai Nachiyar History
Kundavai Nachiyar History-குந்தவை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
பிற்கால சோழர்களில் முதலாம் இராஜராஜன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் காலத்தை சோழர்களின் பொற்காலம் என வரலாற்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இராஜராஜசோழன் தனது வாழ்நாளில் போற்றி பெருமைப்படுத்திய பெண்மணிகள் இருவர்.
மதுராந்தகசோழன் என்கின்ற உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தனின் மனைவியுமான செம்பியன்மாதேவியார் அதில் ஒருவர். மற்றொருவர் அவனது மூத்தசகோதரியான குந்தவை நாச்சியார் என்கின்ற மந்தாகினி தேவி.
சோழர் குலத்தின் மூத்தபெண்மணி என்ற வகையில் பாட்டி உறவுமுறை உள்ள செம்பியன் மாதேவியாரை போற்றி பெருமைப்படுத்தியதில் வியப்பேதுமில்லை. தன்னைவிட சில வருடங்கள் மூத்தவரான குந்தவை நாச்சியாரை தனது தாய்க்கு நிகராக போற்றி பெருமைப்படுத்தியது வரலாற்றில் காணக் கிடைக்கிறது . தனது மகளுக்கு மூத்த சகோதரியின் பெயரையே வைத்துள்ளதும் குந்தவை நாச்சியார் மீது இராஜராஜசோழன் வைத்திருந்த மதிப்பும் மரியாதையையும் உறுதிப்படுத்துகிறது.
சோழ வரலாற்றில் குந்தவை என பெயரிடப்பட்டவர்கள் மூன்று பேர். கீழைச்சாளுக்கிய அரசகுல பெண்ணை இராஜராஜ சோழனின் பாட்டனாரான அரிஞ்செயச்சோழன் மணம்செய்திருந்தான். இவர் வீமன் குந்தவை என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரையே இராஜராஜசோழனின் திருத்தமக்கையான மந்தாகினி என்கின்ற குந்தவைக்கு சூட்டியுள்ளனர்.
இவர் மீது கொண்ட மதிப்பும் மரியாதையாலும் தனது மகளுக்கு குந்தவை என இராஜராஜசோழன் பெயரிட்டுள்ளான். இராஜராஜனின் மூத்த சகோதரி குந்தவையையும், மகள் குந்தவையையும் ஒருவராக கருதி குழப்பம் அடைவதுணடு. இராஜராஜசோழனின் அக்காள் குந்தவையை ஆழ்வார்பரந்தகன், குந்தவை பிராட்டியார், வள்ளவரையர் வந்தியத்தேவர், மாதேவர்மாதேவியார், திருமகளார், ஸ்ரீ பராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சிறப்பாகக் குறித்து வருகின்றன.
அழகும் ஆற்றலும் மதி நுட்பமும் மிக்க குந்தவை நாச்சியார், தனது மற்றொரு சகோதரன் ஆதித்திய கரிகாலன் கொலையுண்டதற்கு பிறகு, தனது தந்தை சுந்தரச்சோழன் இறப்புக்கு பிறகு, தனது தாயார் வானவன் மாதேவியார் சிதை ஏற்றத்திற்கு பிறகு , தனது தம்பியான இராஜராஜ சோழனை பெற்றோர் இடத்திலிருந்து போற்றி வளர்த்து பதினைந்து ஆண்டுகள் பாதுகாத்து அரியணை ஏற உறுதுணையாய் இருந்துள்ளார்.
சோழர்களைப் பற்றி ஆய்வு செய்த பலரும் இராஜராஜ சோழனின் இளமை பருவம் குறித்து சரியாகத் தெரியவில்லை என்று தங்களது ஆய்வு நூல்களில் குறிக்கின்றனர். இராஜராஜசோழனின் இளமைக்காலம் என்பது ஆதித்தியகரிகால சோழனின் படுகாலை, சுந்தரச்சோழன் காஞ்சியில் இருந்த பொன்மாளிகையில் இருந்து எஞ்சியது, வானவன் மாதேவியாரின் எரிமூழ்குதல், உத்தமச்சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சி காலமாகும். இந்த காலகட்டத்தில் இராஜராஜசோழனும், குந்தவைநாச்சியார் குறித்து சரியாக தெரியவில்லை என்பது ஆய்வுக்குரியதாகும். உத்தமசோழனின் ஆட்சியில் மேற்கண்ட இருவரும் தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும், அக்காலகட்டத்தில் குந்தவை நாச்சியார், இராஜராஜசோழனை அரியணை ஏற்ற தயார் செய்துள்ளார் என்பதும் விளங்குகிறது.
மேலும், சோழப்பேரரசில் அரச மகளிரை குடிமக்கள் தெய்வத்திற்கு நிகராக போற்றி வழிபட்டுள்ளனர். குந்தவை நாச்சியார் தஞ்சை பெரியகோயிலுக்கு தம்மையாக ஒரு திருமேனியை செய்து அளித்துள்ளார் என தஞ்சை கோயில் கல்வெட்டில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
விசயாலய சோழன், ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டராதித்தர், அரிஞ்சய சோழன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன, உத்தம சோழன், இராசராச சோழன், இராசேந்திர சோழன், இராசாதிராச சோழன், இராசேந்திர சோழன், வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், இவர்கள் இடைக்காலச் சோழர்கள்.
குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவரான முதலாம் இராஜராஜனின் மூத்த சகோதரியும் , ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவார்கள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில. மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவர். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறார் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட 'சுந்தர சோழ விண்ணகர்' என்னும் திருமால் கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில் ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் மூத்த சகோதரி குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினார். இம்மூன்று கோயில்களுக்கும் அவர் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது.
இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் ஆற்றல் மிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் மொத்த சகோதரியாகவும் வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள்.
இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கும்போது குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது.
பராந்தக சுந்தரசோழன், செம்பியன் மாதேவி, அநிருத்தன், அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோர் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் குந்தவை நாச்சியார்.
குந்தவையும் அவள் தோழி வானதியும் குடந்தை சோதிடரிடம் வருகிறார்கள். அப்போது அங்கு வரும் வந்தியத்தேவனைச் சந்திக்கிறாள் குந்தவை. வானதியின் பயத்தினைப் போக்க ஆற்றங்கரையில் இறந்துபோன முதலையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில் அதை உண்மை முதலையென நினைத்து வந்தியத்தேவன் வேல் எறிகிறான். குந்தவையின் தோழிகள் இதனைக் கண்டு சிரித்துவிட வந்தியத்தேவன் கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறான். இரண்டு முறை வந்தியத்தேவனைச் சந்தித்தும் அவனிடம் குந்தவையால் பேசமுடியவில்லை. அதன் பிறகு வந்தியத்தேவனே குந்தவையைத் தேடி வந்து குந்தவையின் சகோதரன் ஆதித்த கரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையை தருகிறான். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
ஈழத்தில் அருள்மொழிவர்மனுக்குத் தஞ்சை நிலவரம் குறித்து எழுதி, உடனே இளவரசரை அழைத்துவரும்படிக் கூறி வந்தியத்தேவனிடம் பொறுப்பினை ஒப்படைக்கின்றாள்.
வந்தியத்தேவன் இளவரசரை சந்தித்து குந்தவையை கோடியக்கரை வரை அழைத்துவருகிறான். அருள்மொழிவர்மனின் உடல்நிலையை குணபடுத்த நாகப்பட்டினத்தில் இருக்கும் புத்த விகாரத்திற்கு பூங்குழலி சேந்தன் அமுதன் துணையுடன் அனுப்புகிறான். இச்செய்தியை பழையாறையில் வசிக்கும் குந்தவையிடம் சேர்ப்பிக்கிறான்.
குந்தவையும், அநிருத்த பிரம்மராயரும் இணைந்து வந்தியத்தேவனை காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு துணையாக இருக்கும் படி அனுப்பி வைக்க முடிவு செய்கிறார்கள். அநிருத்தரால் சிறைபட்ட வந்தியத் தேவனை விடுவித்து காஞ்சிக்கு செல்லும்படியும், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு எக்காரணம் கொண்டும் சென்றுவிடாமல் காக்கவும் அறிவுருத்துகிறாள். அப்போது வந்தியத் தேவன் மேல் இருக்கும் தன்னுடைய காதலையும் தெரிவிக்கின்றாள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் காஞ்சிக்கு செல்கின்றார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu