பிரியா விடை பெற்றார் ப்ரியா கல்யாணராமன்..! 33 ஆண்டுகால இதழியல் ஆசிரியர்..!
குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்.
Dead News Today - முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியில் இயங்கிய ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் 22/06/2022 அன்று காலையில் தன் இயக்கத்தை இதயவலியின் தாக்கத்தில் மூச்சை முழுமையாக நிறுத்திக்கொண்டார். ஏராளமான வாசக இதயங்களில்… எண்ணற்ற நண்பர்களின் மனத்தில்… இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர்களின் சிந்தைகளில் இன்னும் எத்தனையெத்தனையோ இவர் முகமறிந்த அத்தனை நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்தவர் ப்ரியா கல்யாணராமன். அவரது இழப்பை அத்தனை எளிதில் கடந்து போய்விட முடியவில்லை என்கிறார்கள் அவரை அறிந்த அத்தனை பேரும்.
இதழியல் உலகில் தடம் பதித்த நாள் முதல் ஓய்வறியா உழைப்பைக்கொண்டு முன்னேற்ற உயரங்களைத் தொட்டவர். குமுதம் குழுமத்தில் இவரது பணிக்காலம் அளவுக்கு வேறு யாரும் அங்கிருந்ததில்லை. வருவார்கள்… போவார்கள்… மீண்டும் வருவார்கள்… வந்தபோதும் போனபோதும் மீண்டும் வந்தபோதும் இவர் தனது புன்னகையோடும் தோழமையோடும் அங்கேயே இருந்தார். அனைவரையும் அரவணைத்தபடியே. இன்று அங்கே அவர் இல்லை என்பதை உடனிருந்த அவர்களால் நம்ப முடியவில்லை.
இதழியல் உலகில் ஒரு சிலரைத்தான் மெச்சத் தகுந்த ஆசிரியராகக் கொண்டாட முடியும். அப்படி ஓர் ஆசிரியர் இவர் என்கிறார்கள் குமுதம் குழும ஆசிரியர் குழுவில். பதவி, ஏற்றத் தாழ்வு பார்த்துப் பழகாத மனிதர். எல்லோரிடமும் சம அளவு நேசத்தை நெஞ்சில் வைத்தவர். உடனினிருப்பவர்கள் மீதான அக்கறை, அன்பு, ஒரு கை அளிப்பதை மறு கை அறியாத அளவுக்கு உதவும் உள்ளம் படைத்தவர்.
கடந்த பத்து நாட்களாக, அதென்னமோ தெரியவில்லை, வழக்கத்துக்கும் கூடுதலாக ஆசிரியர் குழுவினரோடு அதிகமதிகம் சிரித்துப் பேசி, அவரது கேபினில் இருந்ததைவிட ஆசிரியர் குழுவினரோடு பகிர்ந்துகொண்ட நேரங்கள்தான் அதிகமாக இருந்தன என்கிறார்கள். இப்படி இருக்கும் அவரது திடீர் மறைவு என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்குத்தான் 21/06/2022 அன்று வரை இயல்பாகவே இருந்தார். அதனால் இப்போதும் நம்பமுடியவில்லை… அவர் மறைந்தார் என்பதை ஏற்கமுடியவில்லை என்று உடைந்து உரைக்கிறார்கள்.
குமுதம், குமுதம் சிநேகிதி, தீராநதி, மண்வாசனை, பக்தி ஸ்பெஷல் என அத்தனைக்கும் ஆசிரியர் என்றாலும் ஒவ்வொரு இதழுக்கும் அந்தந்த இதழுக்கேற்ற பாணியில் இவர் எழுத்து சிறக்கும் தனித்துத் தெரியும் என்று எல்லோரும் வியந்து குறிப்பிடுவார்கள். புதிய படைப்பாளிகளை அவர்தம் திறமை அறிந்து ஊக்குவித்து உயர்த்துவதில் உயர் குணம் கொண்டவர்.
அவரது ஆசிரியர் குழுவில் இருந்து இப்படிப் பகிர்ந்து கலங்குகிறார்கள்… என்னவெனில்… "அலுவலகத்தில் உள்ளே நுழையும்போது ஓர் உதவி ஆசிரியர், எதிர்கொண்ட இவரைப் பார்த்து வணக்கம் என்கிறார். பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அதன்பின் ப்ரியா சார், "வணக்கம் எல்லாம் வேண்டாமே சார்.. நெருக்கமா இருக்கும் நமக்குள் ஏன் சார் இதெல்லாம்.. ஒரு சிரிப்போடு, ஹாய் சொல்லிக்கடக்கலாமே…" என்றார்.
"இந்த ஒரு வாரமா அடிக்கொருதரம் வந்துவந்து அளவுக்கதிகமாகவே சிரிச்சு சிரிச்சு பேசியதை மறக்கவே முடியலை சார். திரும்புற பக்கமெல்லாம் அவரே இருக்கிற மாதிரிதான் இருக்கு…"
" எங்களைச் சுற்றி இருக்கும் அத்தனை இதழ்களிலும் அவர் புன்னகை மாறாத முகமே நினைவூட்டுகிறது. அவர் அற்ற வெறுமை மனத்தைப் பிசைகிறது. என்ன பேசினாலும் அதற்குள் அவர் மேற்கோளாகிறார்.." என்கிறார்கள்.
ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் இழப்பின் வலியை தாங்கிக் கடக்கும் மனவலிமையை குமுதம் குழும நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறைவன் வழங்குவானாக. ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனின் ஆன்மா அமைதியடைய இறைவன் அருள்வானாக.
ஹாங்காங்கிலிருந்து மகன் வருகைக்காக காத்திருக்கும் ப்ரியா கல்யாணராமன் 24/06/2022 அன்று காலை நல்லடக்கமாகிறார்.
ப்ரியா கல்யாணராமன் இல்ல முகவரி:
10A, ரஜினி ராஜா கோயில் தெரு,
ஐந்தாவது சர்க்குலர் சாலை,
ஜவஹர் நகர், பெரம்பூர்,
சென்னை-82
மாரடைப்பென்னும்..
காரணம் காட்டி,
காலன் அவரை
காவு வாங்கிக்கொண்டான்..!
எழுத்துலகின் எல்லையில்லா..
வான்வெளியில்,
அவரது
எழுத்துக்கள்
நட்சத்திரங்களாய்
ஜொலித்துக்கொண்டிருக்கின்றன..!
இன்ஸ்டாநியூஸ் தளத்தின் சார்பாக அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குமுதம் குழும பணியாளர்களுக்கும் வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்வதுடன் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியுடன், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu