கிருஷ்ணகிரி: அடிப்படை வசதி செய்து தர மலைகிராம மக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கும்பளம் ஊராட்சிக்குட்பட்ட சின்னகுத்தி, பெரியகுத்தி, சிகரலப்பள்ளி, ராமன்தொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில், 60 முதல் 80 ஆண்டுகளாக குடிசை அமைத்து, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்தும், காடுகளில் காட்டுத்தேன் சேகரிப்பது, விறகு பொறுக்குவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இதன் மூலம், போதிய வருமானம் கிடைக்காததல், தற்போது தங்களது 7 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, 50 முதல் 60 கி.மீ தொலைவில் உள்ள நிலசுவான்தாரர்களிடம் ஆடு, மாடு மேய்க்கவும், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் என வருடத்திற்கு வாங்கி கொண்டு, விட்டுவிடுகின்றனர். அந்த வருமானத்தை கொண்டுதான் குடும்பம் நடத்தும் அவலநிலை உள்ளது.
எனவே, வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு பயந்து வாழ்ந்து வரும் தங்களுக்கு, அரசு சார்பில் பட்டா வழங்க வேண்டும், வீடு கட்டித்தர வேண்டும். இதர பிற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், எந்த வருமானமும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் மலைக்கிராம மக்களுக்கு, ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி, வாழ்வாதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu