வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில் தந்தை புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர், கோவிந்தராஜ் (60); விவசாயி. மாடு வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கு, லோகேஷ்குமார் (32) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார் தன் தந்தையுடன் கோபித்து கொண்டு கடந்த, 8 ஆண்டுகளாக ஓசூரில் தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
முதல் மகள் திருமணமாகி, கிருஷ்ணகிரி ராசுவீதியில் வசித்து வருகிறார். 2வது மகள் புவனேஸ்வரி, (28) விபத்தில் கணவன் இறந்து விட்ட நிலையில், தற்போது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.புவனேஸ்வரிக்கு வீட்டின் முன்பு, பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளனர்
இந்நிலையில், தன் வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கோவிந்தராஜ் போலீசில் புகாரளித்துள்ளார். அவரது புகாரின்படி, கடந்த12ம் தேதி பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த புவனேஸ்வரிடம், முகத்தில் கர்ச்சிப் கட்டிய இருவர் பைக்கில் வந்து, கூல்டிரிங்ஸ் தருமாறு கேட்டுள்ளனர்.
வீட்டிற்குள் சென்று கூல்டிரிங்ஸ் எடுத்த புவனேஸ்வரி மீது மயக்க பொடியை தூவி வீட்டில் இருந்த , 20 சவரன் நகைகள், 16 லட்ச ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு, 19 லட்சத்து,7 ஆயிரத்து, 500 ரூபாய் ஆகும். வீட்டின் பின்புறத்தில் இருந்த புவனேஸ்வரியின் தாய் வீட்டிற்குள் வந்தவுடன், தன் மகள் மயங்கிய நிலையில் கிடந்ததையும், நகை, பணம் கொள்ளை போனதை அறிந்ததாக, புகாரில் கூறினர்.
மேலும் நிலம் விற்ற பணம் இருப்பதையும், அதை வைக்கும் இடம் ஆகிய விவரங்கள் தன் மகன் லோகேஷ்குமாருக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர் ஆட்களை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu