கர்நாடகாவின் யார்கோல் பகுதியில் புதிய அணை: கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை
கர்நாடகா மாநிலம் யார்கோல் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய அணை.
தமிழகத்திற்கு உரிய காவிரிநீரை தர மறுக்கும் கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. அத்துடன், கர்நாடகாவில் மேலும் ஒரு அணையை கட்டி தமிழகத்தில் பாசனம் பாதிக்கும் நிலையை கர்நாடகா அரசு உருவாக்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், கர்நாடக மாநில வனப்பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, யார்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிதாக அணை முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியது.
இதை, அப்போதைய அதிமுக அரசு எதிர்த்து, நீதிமன்றம் சென்றது. இதனிடையே, கொரோனா, ஊரடங்கு, தமிழக சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை நடந்த நிலையில் கர்நாடகா அரசு அமைதியாக அந்த அணையை கட்டி முடித்துவிட்டது. இந்த அணை கர்நாடக மாநிலம் கோலார், மாலூரை சுற்றி உள்ள நகர மக்களின் குடிநீர் தேவைக்கு என அந்த மாநில அரசு கூறி வந்தாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கர்நாடகாவில் கட்டப்பட்டடுள்ள அணையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 870 ஹெக்டேர் புஞ்சை பாசன வசதி பெறும் நிலங்கள் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
தென்பெண்ணை ஆற்று கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டப்பட்டதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஒன்றிய விவசாயிகள் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu