கிருஷ்ணகிரியில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் நாசர்(38). இவர் மொத்த காய்கறி கடை வைத்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் காய்கறி வாங்கிய வகையில் ரூ.1 கோடியை நாசர் ஓசூர் வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டியது இருந்தது.
அந்த தொகை இல்லாததால் தனது கேஷியர் முத்துகுமரனிடம் நிலமைமைய எடுத்துக் கூறினார். அப்போது அவர், ரூ.80 லட்சம் தயார் செய்து கொடுங்கள். தங்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் நபர்களை தெரியும். ரூ.1 கோடி வாங்கி தருகிறோம் என கூறியுள்ளார். அதை நம்பி நாசர் ரூ.70 லட்சம் தயார் செய்து முத்துகுமரனிடம் கொடுத்தார்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் வைத்து ரூ.70 லட்சத்தை கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட 2 பேர் காரில் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பணத்தை இரட்டிப்பாக்க கும்பல் வந்ததும், வந்த இடத்தில் 2 பேர் ரூ.70 லட்சத்துடன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பண இரட்டிப்புக்காக வந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமார், முத்துகுமரன், காமராஜ், நாசர் ஆகிய 6 பேரை கடந்த 4ம் தேதி மகராஜகடை போலீசார் கைது செய்தனர்.
ரூ.70 லட்சத்துடன் தப்பி ஓடிய நாகப்பட்டிணம் மாவட்டம் பண்டரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபுபக்கர் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.
பணத்துடன் தப்பிய நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருமபாளையம் பகுதியைச் சேர்ந்த பண்டரியை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் தங்கம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(43), புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் கடவாகோட்டையை சேர்ந்த சோமசுந்தரம்(சு8) ஆகிய 2 பேரை மகராஜகடை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu