2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு

2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
X

தீக்குளிக்க முயன்ற சுமதி மற்றும் அவரது மகள்கள்.

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், 2 சிறுமிகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சின்னமடம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். டீ சப்ளை செய்யும் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தீபிகா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முறையே 10 மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி, மகள் தனியே வசித்து வந்தனர்.

இதில் உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.67 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. பாலகிருஷ்ணன் உயிரிழந்ததையடுத்து அந்த சொத்தை அவரது அண்ணன் பிரபாகரன் அபகரித்துக்கொண்டு, இவர்களை அனாதையாக விட்டுள்ளார். இந்நிலையில் தனது கணவர் பங்கை கொடுக்கும் படி சுமதி, பிரபாகரனிடம் கேட்டுள்ளார்.

முதலில் கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து சுமதி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு சேர வேண்டிய சொத்தை அவரது சகோதரர் அபகரித்துக் கொண்டு ஏமாற்றுவதாக புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சுமதி, திடீரென மண்ணெண்ணை கேனை எடுத்து தனது இரண்டு மகள்கள் மீதும் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை மீட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பறித்து. அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், சுமதி மற்றும் அவரது மகள்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இது குறித்து சுமதி கூறுகையில், 2 குழந்தைகளுடன் நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனது நிலத்தை மீட்டுத்தர கோரி போலீசில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து போலீசார், அவர்கள் மூன்று பேரையும் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!