ஊர் மக்கள் முயற்சியால் "புத்தொளி பெறும் தொன்மையான ஆலயம்"
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சிறிய ஊராக இருக்கும் சின்னகொத்தூரில், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன்கோவில் உள்ளது. இது பிற்கால சோழர்கள் காலத்திய கட்டிட கலை அமைப்பு கொண்டதாகும். அதேபோல இந்த ஊர் ஒய்சாள மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளதாக பிற கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
கோவிலில் படிஎடுக்கப்பட்ட 15 கல்வெட்டுகள் அந்த கோவிலின் சிறப்பினை நமக்கு தெரிவிக்கிறது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், இந்த கோவிலில் மேலும் 6 கல்வெட்டுகள் இருப்பதாகவும், விரைவில் படி எடுத்து அதன் விவரம் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இங்குள்ள சிவன்கோவில் முதலில் ஏகாம்பரநாதர் கோவில் என்றும் விஜயநகர காலத்தில் கைலாசநாதர் கோவில் என்றும், தற்போது குஞ்சம்மாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில் மிகவும் பாழடைந்துள்ளது. வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற சைலேஸ் கிருஷ்ணன் உதவியுள்ளார். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஓசூரைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன், ஊர் மக்கள் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அழைத்து ஊர்கவுண்டர் கணேசன் உள்ளிட்ட ஒரு குழுவை அமைத்து, அந்த பழமை வாய்ந்த கோவிலின் பழமை மாறாமல் புதுபிக்க வேண்டும் என்பதையும், இந்த மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை ஒரு சுற்றுலா தலமாக மாற்றவேண்டியும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதற்கான முதற்கட்ட திட்டமிடப்பட்ட செலவீனம் ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூர் மக்கள் நலசங்கம், ஊர் மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இந்த நிதியை திரட்டி வருகின்றனர். தற்போது ஊர் மக்கள் கோவிலின் மேற்பகுதியில் உள்ள பழைய செங்கற்கள் மற்றும் மண் இவற்றினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu